பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளும் திறன் விவசாயிகளுக்கு உள்ளது!! ஹசாரேவுக்கு யெச்சூரி பதிலடி

மும்பை:

மகாராஷ்டிராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். சில இடங்களில் இது வன்முறையாக மாறியுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநில முதல்வர் பட்னாவிஸூடனும், விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்திருந்தார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், ‘‘ அன்னா ஹசாரே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு அவரது உடல்நிலை மீது கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தவும், அதற்கு தீர்வு காணவும் அவர்களிடம் திறன் உள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ ஒரு புறம் பிரதமர் மோடி அவரது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் அவர் மூன்றாம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறார். கடந்த 3 ஆண்டுகளில் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சூழ்நிலையில் அவர் எப்படி இதை கொண்டாடலாம்’’ என்று கேளவ் எழுப்பியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘கடந்த ஒரு ஆண்டாக நாசிக் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு முதல்வர் பட்னாவிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

வரும் 5ம் தேதி தாசில்தார் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் அசோக் தவாலே அறிவித்துள்ளார்.