விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது: உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மீண்டும் திட்டவட்டம்

டெல்லி: உச்சநீதிமன்றம் பற்றிய விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே சொகுசு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி ஹெல்மெட் அணியவில்லை, முகக்கவசமும் அணியவில்லையே என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்களை அறிவிப்பதாக இருந்தது. அதன்படி நீதிபதிகள், பிரசாந்த் பூஷணுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கினாலும், பூஷண் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்கு பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்தனர்.

அந்த அவகாசமும் முடிந்தது. இந் நிலையில் இன்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.