நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பு

புதுடெல்லி:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குறித்து டிவிட்டரில் விமர்சித்திருந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து விசாரணையில் நீதிபதி மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது என பூஷன் தனது தரப்பு வாதத்தினை முன்வைத்திருந்தார்.
தலைமை நீதிபதி பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருந்த புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இது குறித்து பூஷன் டிவிட்டரில், நீதிபதி ஹெல்மெட் அணியாதிருந்தது குறித்தும் முககவசம் அணியாதிருந்தது குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தார். இந்நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் ஒரு மனுவைத் தொடர்ந்து பூஷனுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிருந்தது.

“நான் ஒப்புக்கொள்கிறேன், பைக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை நான் கவனிக்கவில்லை. எனவே ஹெல்மெட் அணிய தேவையில்லை. எனவே எனது ட்வீட்டின் அந்த பகுதிக்கு வருந்துகிறேன். இருப்பினும், நான் கூறியவற்றின் மீதமுள்ள பகுதிக்கு நான் வருந்தவில்லை. நீதிமன்றத்தில் குறைவான வழக்கு விசாரணைக்கு நான் வேதனையடைந்தேன். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை குறித்தும் அதிருப்தியடைந்துள்ளேன்.” என பூஷன் தனது வாதத்தினை நீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தார்.

தலைமை நீதிபதி பாப்டே குறித்த டிவிட்டுக்கு அடுத்தபடியாக நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கடைசி நான்கு நீதிபதிகள் குறித்தும் தனது கருத்தினை பூஷன் டிவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இது குறித்து, “நீதிபதிகள் மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது.” என கூறியுள்ளார்.

மேலும், “ஒரு தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் அல்லது தலைமை நீதிபதிகள் அடுத்தடுத்து வருவதை நேர்மையாக விமர்சிப்பது நீதிமன்றத்தை அவதூறு செய்வதாக கருத முடியாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை விமர்சிப்பதாக கருத முடியாது.” என பூஷன் கூறியுள்ளார்.

பிரசாந்த் பூஷன்

“நான் ட்வீட் செய்திருப்பது, கடந்த ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் பங்கு பற்றிய எனது அப்பட்டமான அபிப்பிராயமாகும். உச்சநீதிமன்றம் ஒரு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்வதில் அவர்களின் பங்கு மற்றும், அவை ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த உதவியது.” என்று பூஷன் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும்,

“கருத்துச் சுதந்திரம் மற்றும் விமர்சிப்பதற்கான இணக்கமான உரிமை ஆகியவை நீதித்துறையின் பலமாகும். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது.” என தனது கருத்தினை நீதிமன்றத்தில் பூஷன் தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.