புதுடெல்லி: நீதித்துறையின் சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை விவாதிக்கும் வகையிலான வெபினார் ஒன்றில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கலந்துகொண்டது குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி.
ஏனெனில், நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சில மாதங்களில், ராஜ்யசபா நியமன உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டதால், ரஞ்சன் கோகோயினுடைய நம்பகத்தன்மை பெரியளவில் கேள்விக்குள்ளானது.
அதிகாரப் பகிர்வு மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தன்மை குறித்து விவாதிப்பதற்கானது அந்த வெபினார். எனவே, அதில் கலந்துகொண்டு, இதுதொடர்பாக பேசுவதற்கு ரஞ்சன் கோகோய் தகுதியானவரா? என்ற வினா எழுந்துள்ளது.
“ராஜ்யசபா உறுப்பினராக, ஓய்வுபெற்ற சில மாதங்களிலேயே பதவியேற்றுக்கொண்டதாக இருக்கட்டும், பாலியல் சீண்டல் புகார் தெரிவித்த பெண்ணின் வழக்கு விஷயத்தில் நடந்துகொண்டதாகட்டும், தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகட்டும், தன் மீதான குற்றங்களை மறைத்துக்கொள்ள தயங்காதவர் மற்றும் தீபக் மிஸ்ரா போன்ற நேர்மையான நீதிபதிகளின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டவர்.
இவர் மீது புகார் கொடுத்த காரணத்திற்காக, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், எந்தளவிற்கு நெருக்கடிக்கு உள்ளாயினர் என்பதை நாம் மறந்துவிட முடியாது” என்று பலவிதமாக தனது அறிக்கையில் கூறியுள்ளார் வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி.