பெரம்பலூர்

காவலரைத் தாக்க முயன்ற வழக்கறிஞர் குறித்த வாட்ஸ்அப் தகவல் வைரலாகி வருகிறது

ஏதாவது பிரச்சினை என்றால் போலீஸ்  ஸ்டேஷனுக்கு போவார்கள், பொதுமக்கள்.

போலீஸ்காரருக்கே பிரச்சினை என்றால் அவர் எங்கே போவார்?
வாட்ஸ் –அப்பில் புலம்பி தள்ள வேண்டியது தான்.

அப்படித்தான் புலம்பியுள்ளார், ஒரு போலீஸ்காரர்.

விவகாரத்துக்கு வருவோம்.

பெரம்பலூர் ஆயுதப்படையில் தலைமைக் காவலராக இருப்பவர், முத்துக்குமார். சில தினங்களுக்கு முன்னர் துரைமங்கலம் பகுதியில் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
சாலை ஓரத்தில் ’டிப்டாப்’இளைஞர், ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் வழக்கறிஞர் என்று தெரிகிறது.அப்போது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
‘’யார் நீங்கள்? இங்கே என்ன செய்கிறீர்கள்?’’ என்று விசாரித்துள்ளார், அந்த காவலர்.
ஆவேசமான அந்த இளைஞர் ‘என்னையே விசாரிக்கிறாயா?’’ என்று கேட்டுத் திட்டியதுடன்  காவலரைத்  தாக்கவும்  முயன்றுள்ளார்.

இது குறித்து காவலர் முத்துக்குமார், தனது உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகார் மீது உயர் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நோந்து நூலான காவலர் முத்துக்குமார், தனது ஆற்றாமையை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் –அப்பில் உலவ விட்டார்.

‘எனக்குக் கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. என்னைத் திட்டிய நபர் மீது  உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நா தழுதழுக்க அவர் பேசிய ’வசனம்’ வைரலாகி வருகிறது.