டெல்லி: டெல்லியில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்தும் விஷயத்தில் வழக்கறிஞர்கள் சிலருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாக தெரிகிறது.

அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றவே, பிரச்னை பெரிதானது.  இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அதனால், ஆத்திரமடைந்த போலீசார், வழக்கறிஞர்களை தாக்க தொடங்கினர். நிலைமை மேலும் மோசம் அடைந்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

அதில் வழக்கறிஞருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால், துப்பாக்கியால் சுடவில்லை என்று போலீசார் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை  கண்டித்த வழக்கறிஞர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், இது தொடர்பாக அவர்கள், டெல்லி மாநகர போலீஸ் ஆணையருக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் புகார் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து வரும் 4ம் தேதி வழக்கறிஞர்கள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.