கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் கண்காணிப்பு…   அடையாறு காவல்துறை  அசத்தல்

சென்னை:

கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், விதிகளை மீறி ஊர் சுற்றி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அடையாறு காவல்துறை புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப் மூலம் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா அறிகுறி காரணமாக, ஏராளமானோர் வீடுகளில் தனிமைப்படுத்துலில் இருக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், பலர் விதிகளை  வெளியில் சுற்றுவதாக சமீபகாலமாக புகார் எழுந்து வருகிறது.  ஏற்கனவே பலர் காணாமல் போய் உள்ளதாக புகார் கூறப்பட்டு, அவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு வாட்ஸ்அப் குழுவை காவல் நிலைய பெயருடன் கோவிட் 19 என்று தொடங்கியுள்ளனர். இந்தக் குழுவில் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உறுப்பினர் களாக சேர்க்கப்படுவர்.  அதன்மூலம், எத்தனை பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள், எத்தனை பேர் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் என்பது தெரிந்துகொள்ளப்படுகிறது.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் அனைவரது செல்போன் எண்களும் சைபர் க்ரைம் மூலம் கண்காணிக்கப்படும், வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் யாரும் வெளியில் சென்றால் சைபர் க்ரைம் போலீசார் அந்தத் தகவலை அந்தப் பகுதி காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பார்கள். இதன்படி கொரோனா தொற்று கொண்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வருவது முற்றிலும் குறைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, அடையாறு காவல்துறையிலும் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு உள்ளதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூலம் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள்  வெளியே செல்லாமல் இருப்பதை உறுதி செய்தும், அவர்களுக்கு தேவையான  மளிகைப் பொருட்களும் வீடுகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது.

அடையாறு  பொலீஸ் வரம்பில் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் 182 வீடுகளில் சுமார் 290 பேர் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைத் தவிர, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.