நெட்டின்:
பத்திரிகையாளர் ஆர் நூருல்லா பதிவு…
பகுத்தறிவை வென்ற பாசம்… அரசியல் தலைவர்களின் அடையாளம்

திருமாவளவனின் சகோதரி இறந்து போனார். அவரின் மறைவையடுத்து இறுதிச் சடங்குகளில் ஈடுபட்டார் திருமா வளவன். அவர் அதை ரகசியப் படுத்தாமல் பகிரங்கமாகவே செய்திருக்கிறார். இதனை அடையாளம் காட்டுகின்ற புகைப்படங்கள் கூட உலா வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றிப் பல்வேறு தரப்பினரும் சாதக பாதகமானத் தங்கள் கருத்துரைகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இது போன்றே ஒரு சம்பவத்தை நான் அசைபோட்டுப் பார்த்துக்கொள்கிறேன்.
ஒரு காலகட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதச் சக்தியாக இருந்து, அரசியலின் அனைத்துக் களங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். தொழிற்சங்கத் தலைவராகவும், எம்பி ஆகவும், மத்திய அமைச்சராகவும், தமிழகக் காங்கிரஸ் தலைவராகவும், தனியே கட்சி நடத்தி அதன் தலைவராகவும்… என்றவாறு பல்வேறு நிலைகளில் இருந்து வந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
அவருடனான எனது நட்பு நீண்டு நெடியது. தன்னை எதிர்த்து அரசியல் செய்தவர்களுக்குக் கூட உதவி செய்து வந்தவர் வாழப்பாடி. அவரைப் பற்றிய இதர விவரங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
வாழப்பாடி ராமமூர்த்தியின் சொந்த ஊர் சேலம் அருகேயுள்ள வாழப்பாடி. அங்குதான் ராமமூர்த்தியின் தாயார் வசித்து வந்தார். வயது மூப்புக் காரணமாக மரணம் எய்தி விட்டார். தகவலை அறிந்ததும் வாழப்பாடி ராமமூர்த்தியின் பிரதான வழக்கறிஞரும் வர்மா கமிஷன் ஜெயின் கமிஷன் ஆகியவற்றில் வாழப்பாடிக்காக வாதிட்டவரும், மத்திய அரசின் உயர்நிலை வழக்கறிஞர் பதவியை வகித்து வந்தவருமான இனிய நண்பர் முத்துகிருஷ்ணனும் நானும் வாழப்பாடிக்கு விரைந்து நெருங்கினோம்.
தன் தாயின் தலைமாட்டில் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. நாங்கள் ஆறுதல் கூறினோம். ஆனால் அவரோ… சோகத்தில் இருந்து மீளமுடியாமல் விம்மினார்.
இடுகாட்டைநோக்கிச் சவ ஊர்வலம் புறப்பட்டபோது ஒரு அபூர்வ காட்சியை எங்களால் காண முடிந்தது. ஊர்வலத்தின் முன்னால் தீச்சட்டியை கையிலேந்தி, மொட்டைத் தலையுடன் ஒருவர் சடங்குச் சம்பிரதாயப் பாங்கில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர்… சாட்சாத் வாழப்பாடி ராமமூர்த்தியேதான். பெரியார் பாசறையில் வளர்ந்து, திராவிட இயக்க உணர்வுகளையே முழு மூச்சோடுக் கொண்டிருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. தேசியக் கட்சிக்கு வந்தாலும் பகுத்தறிவு உணர்வுகளை எப்போதுமே அவர் விட்டுத் தந்ததில்லை. முதன்முறையாக அவர் சடங்குகளில் அங்கம் வகிப்பதைக் கண்டு நாங்கள் மெய்மறந்து நின்றோம்.
இறுதிக் காரியங்கள் முடிந்து விட்டன. வாழப்பாடியாரிடம் நாங்கள் மீண்டும் சிறிது நேரம் பேசிவிட்டு, அருகிலிருந்த காங்கிரஸின் மூத்த தலைவரான எம்பி சுப்பிரமணியத்திடம் உரையாடிவிட்டுக் கிளம்பி விட்டோம்.
சில வாரங்கள் கழித்து நிருபர் கூட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்தியைச் சந்தித்தேன். செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு அவரிடம் மென்மையாகவே கேட்டேன்.
“பெரியாரியக் கொள்கையில் நீங்கள் பிடிப்பு உள்ளவர். பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர். மதச் சடங்கு மறுப்புக் கொள்கையில் தீவிரத் துடிப்பு கொண்டவர் நீங்கள். உங்கள் தாயின் இறுதிச் சடங்கின்போது தீச்சட்டி ஏந்திச் சடங்குகளைச் செய்தீர்களே!
இது உங்கள் வாதத்துக்கும் வாழ்க்கைக்கும் இ
டையே உள்ள முரண்பாடாகத் தோன்றவில்லையா ?” என்று கேட்டேன்
அவர் கூச்சப்படாமல் இப்படிப் பேசினார்:
“ஏங்க… டீக்கடை பெஞ்ச்சாரே! (அவர் என்னை இப்படியும் அடிக்கடி அழைப்பது வழக்கம்) என்னைப் பெற்று வளர்த்த ஆத்தாவின் கடைசி ஆசை இது. தாய்க்கு மகன் செய்ய வேண்டிய கடமை என்ற வகையில் அவர்களின் கடைசி வேண்டுகோஏற்ற நிலையில் நான் அந்த சடங்குகளைச் செய்து இருக்கிறேன். இதைச் செய்யவும் நான் வெட்கப்பட வில்லை. தாய் மறைந்த பிறகு அவர்கள் காட்டிவந்த அன்பு அதிகப்படியாக உணர முடிகிறது. நானும் அந்த நிலையில் தான் உருகிக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் தந்தையின் மறைவின்போது சேலத்தில் உங்கள் வீட்டிற்கு நான் வந்திருந்தேன். நீங்கள் காட்டிய முகபாவங்களும் பரிதவிப்புகளும் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீங்கள் அன்று இருந்த அதே நிலையில் இன்று நான் இருக்கிறேன்…..”
– வாழப்பாடி ராமமூர்த்தி தன் தாயின் நெருக்கத்தைச் சொல்லில் செதுக்கினார் .
பகுத்தறிவைப் பாசம் வென்றுவிட்டது.