ஆப்கன், பஹ்ரைன், குவைத் நாடுகளிலும் கொரோனா: ஈரானில் இருந்து பரவியதாக அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டுள்ளார் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அந்நாட்டின் சுகாதார அமைச்சர் பெரோசிதின் பெரோஸ் அறிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:

ஹெராத்தில் முதல் நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். ஈரான் எல்லையில் இருக்கும் இந்த மாகாணத்துக்கு பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். அந்நாட்டுக்கான தரைவழி மற்றும் வான்வழி பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் தாக்கம் குறித்து இப்பகுதி முழுவதும் அச்சங்கள் அதிகரித்துள்ளன என்றார்.ஆப்கானிஸ்தானை தொடர்ந்து, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.

இதை அவ்விரு நாடுகளும் உறுதிப்படுத்தி உள்ளன. கொரோனா வைரஸ், ஈரான் நாட்டில் இருந்து பரவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குவைத்தில் 3 பேரும், பஹ்ரைனில் ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறி இருப்பதாவது: ஈரானிய நகரமான மஷாத்தில் இருந்து வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் கொரோனா வைரஸ் (COVID-19) மூன்று பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் மூவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.