காபூல்: தாலிபான் அமைப்பினர் வன்முறையைக் கட்டுப்படுத்தினால், சிறையிலுள்ள 5000 தாலிபன் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் அரசு.

ஆப்கானிஸ்தானின் இரண்டு ராணுவ தளங்களிலிருந்து தனது துருப்புகளை வெளியேற்றும் பணி துவங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீண்டகாலமாக நீடித்துவரும் அமெரிக்காவின் ஆப்கன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கத்தார் நாட்டின் தோஹா நகரில், அமெரிக்கா – தாலிபான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, அமெரிக்காவின் அந்த அறிவிப்பு வெளியானது.

ஆப்கன் அரசினுடைய அறிவிப்பின்படி, முதற்கட்ட நல்லெண்ண நடவடிக்கையாக 1500 தாலிபான் கைதிகள் வரும் சனிக்கிழமையன்று விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் அரசுக்கும் தாலிபான்களுக்கும் பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர், எஞ்சிய 3500 கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தாலிபான்களுடைய வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த விடுவிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது.