காபூல்

மூன்று தாலிபன் தீவிரவாதக் கைதிகளை இரு பணயக் கைதிகளுக்குப் பதிலாக விடுவிக்க ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் இரு பேராசிரியர்களைத் துப்பாக்கி முனையில் தாலிபன்கள் கடத்திச் சென்றனர்.   அவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் கிங் மற்றொருவர் ஆஸ்திரேலியாவின் டிமோதி வீக்ஸ் ஆகியோர் ஆவர்.  அவர்கள் இருவரையும் விடுவிக்க ஆப்கன் சிறையில் உள்ள மூன்று தாலிபன் கைதிகள் விடுதலையை தாலிபன் கோரியது

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் கிங் கடந்த சில மாதங்களாகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார். அவருக்கு உயிர் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து பாகிஸ்தான் மூலம் தாலிபன்கள் ஆப்கன் அரசுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.  அப்போது இந்த இருவரையும் விடுவிக்க உடனடியாக மூன்று தாலிபன் கைதிகளை விடுவிக்க வேண்டும் என மீண்டும் நிபந்தனை விடுத்தனர்.

இந்த மூவரில் தாலிபன் இயக்க தலைவர்களில் ஒருவரின் சகோதரர் அனாஸ் ஹக்கானியும் ஒருவர் ஆவார்.  இவர்கள் மூவர் மீதும் பல பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்ளன.   இவர்கள் மூவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இவ்ர்கள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.

இன்று ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி, “ஆப்கன் அர்சின் பாதுகாவலில் பக்ராம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று தாலிபன் கைதிகளை நிபந்தனை அடிப்படியில் விடுவிக்க முடிவு செய்துள்ளோம்.  பணயக் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருவதால் ஆப்கன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.  இந்த மூவரின் விடுதலை மூலம் பணயக்  கைதிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.