ஆப்ரி்க்கா: இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் கோடீஸ்வரர் கடத்தல்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்ரிக்காவின் இளம் கோடிஸ்வரர் முகமது டியூஜி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். துப்பாக்கி முனையில் முகமது டியூஜி கடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

billionaire

இந்தியாவை சேர்ந்த முகமது டியூஜி தனது குடும்பத்துடன் ஆப்ரிக்காவில் குறியேறியுள்ளார். இளம் தொழிலதிபரான முகமது டியூஜி அந்நாட்டின் விரல்விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவராவார். தான்சானிவில் வசித்து வந்த முகமது டியூஜி தனது பரம்பரை தொழிலான சில்லரை வியாபாரத்தை தொடங்கி 10க்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி உள்ளார்.

விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்ரிக்கா முழுமைக்கும் இவர் நடத்தி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட ஆப்ரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17-ம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்ரிகாவில் இளம் கோடிஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது. தான்சானியாவில் பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி முதலிடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில், முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும், முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்தல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தார் இ ஸலாம் கவர்னர் கூறுகையில், ‘ சொகுசு விடுதியில் உடல் பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர், அவர்கள் கொள்ளையர்கள் என தெரிய வந்துந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.

இது தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜி கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது ’ என தெரிவித்தார்.