ஓராண்டுக்கு பிறகு இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தது ஆஸ்திரேலியா

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு  ஆதரவாக ஓராண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா தனது முடிவை அறிவித்து உள்ளது.

மோரிசன் – ஜெருசலேம் – டிரம்ப்

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இருந்த வந்த ஜெருசலேமை ஐ.நா. அங்கீகரிக்காமல் இருந்து வந்த நிலையில், ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி அறிவிப்பு  வெளியிட்டார்.  இஸ்ரேலின் ‘டெல் அவிவ்’ என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்போவதாகவும் டிரம்ப் கூறினார்.

இதற்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று  அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ஓராண்டு கழித்து பதில் சொல்வதாக ஆஸ்திரேயா அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது ஜெருசலேம் தலைநகராக அறிவிக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை  அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்  கூறி உள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் தாராளமயமான ஜனநாயகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் விருப்பம். அதுவே ஐ.நா.,வின் நோக்கமும் கூட என்று கூறியுள்ள மோரிசன்,  இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிக்கிறோம் என்றும், இதை முறைப்படி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

எங்களின் வெளிநாட்டுக் கொள்கை எங்களின் குணத்தையும், நாட்டின் மதிப்புகளையும் பேசுவதாக இருக்க வேண்டும். என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். நாங்கள் எதன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அதை நாங்கள் பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு நெருங்கிய நட்பு நாடான இந்தோனேசியா, மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரிக்கக்கூடாது என்று  கூறி வந்த நிலையில், இந்தோனே சியாவின் எதிர்ப்பையும் மீறி தற்போது ஆஸ்திரேலியா ஜெருசலேமை அங்கீகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.