சென்னை

டந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.  நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில்; உள்ளோர் எண்ணிக்கை 4904 ஆக இருந்தது.  நேற்று 7 பேர் மரணம் அடைந்த நிலையில் சென்னையில் ஒருவர் கூட மரணம் அடையவில்லை.

இது கடந்த 10 மாதங்களாக இல்லாத ஒரு நிகழ்வாகும். சென்னையில் நேற்று வரை 2.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 4085 பேர் உயிர் இழந்து 1693 பேர் சிகிச்சையில் இருந்தனர்.  சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 2 மண்டலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.  அதாவது இந்த இரு பகுதிகளில் மட்டுமே கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை குணமடைந்தோரை விட அதிகமாக இருந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையின் மண்டல எண் 10 (கோடம்பாக்கம்) பகுதியில் 1.1% கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே வேளையில் மண்டல எண் 9 (மணலி) பகுதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் அதாவது 41.7% குறைந்துள்ளது.  முன்பு பரிசோதனை மற்றும் பாதிப்பு விகிதம் 5% க்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அது 1.4% ஆக குறைந்துள்ளது.