டெல்லி:  இந்தியாவில், சுமார் 163 நாட்களுக்கு பிறகு, இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்,  19 ஆயிரத்து 556 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 75 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.   நேற்று ஒரே நாளில்,  30, 376 பேர்  குணமடைந்தனர்.  இதனால், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96 லட்சத்து 36 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும்  301 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில்  பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில்,  2, 92, 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன்,  இந்தியாவில்  163 நாட்களுக்குப் பிறகு கொரோனா  பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் (2,92,518) குறைந்துள்ளது. இது, 2.90% என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே  கடந்த ஜூலை 12-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 2,92,258 ஆக இருந்தது. அதையடுத்து, தற்போது 3லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர்,  இதேபோல், கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒரு நாளின் பாதிப்பு 19,148 ஆக இருந்தது. தற்போது  173 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளின் பாதிப்பு 20,000-கும் கீழ் (19,556) குறைந்துள்ளது என்றார். 

இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் குறைவாக (219)  இருப்பதாகவும்,  நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம்  95.65% அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுபோல,  தொடர்ந்து 25-வது நாளாக புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குணமடைந்தவர்களில் 75.31 சதவீதத்தினரும், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 75.69 சதவீதத்தினரும், உயிரிழந்தவர்களில் 76.74 சதவீதத்தினரும் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இவவாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால், இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா குறித்து, அங்குள்ள ஆராய்ச்சி நிறுவனத்துடன் பேசி இருப்பதாகவும்,  பிறழ்வு வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதை புரிந்துகொண்டோம் என்றும்,   எங்கள் சிகிச்சை வழிகாட்டுதல்களில் எந்த மாற்றமும் இருக்காது … நமது தற்போதைய புரிதலின் படி, உருவாக்கப்படும் தடுப்பூசிகளில் பிறழ்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.