இரு வருடம் முன்பு தலைமறைவான சாமியார் : இப்போது தேடும் போலிஸ்

சென்னை

செக்ஸ் புகார் காரணமாக 2 வருடங்கள் முன்பு தலைமறைவான சாமியாரை காவல்துறை இப்போது தேடத் தொடங்கிஉள்ளது.

ஸ்ரீ ராமானுஜ டிரஸ்ட் என்னும் பொதுத் தொண்டு நிறுவனத்தின் தாளாளர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி சாமி ஆவார். இவருடைய இயற்பெயர் வெங்கட சரவணன் ஆகும். இவர் பல ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வுகளை நடத்தி உள்ளார். தற்போது 46 வயதாகும் இவருக்கு பலர் சீடர்களாக உள்ளனர். இவர் அடிக்கடி வட இந்திய மாநிலங்களுக்கும் நேபாள நாட்டுக்கும் ஆன்மிக சுற்றுலா சென்று வருவது வழக்கமாகும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் மீது சென்னை ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் சாமியார் தனது மனைவியையும் அப்போது பத்தாம் வகுப்பு மாணவியான தனது மகளையும் கடத்திச் சென்று இரண்டு வருடம் வரை அடைத்து வைத்ததாக கூறப்பட்டது.

அந்தக் கால கட்டத்தில் சாமியார் இருவரையும் பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுரேஷிடம் இருந்து ரூ.15 லட்சம் வரை சாமியார் மிரட்டி வாங்கி உள்ளதாகவும் சுரேஷின் வீட்டில் உள்ள தரைப்பகுதியை சாமியார் ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டு இருந்தது.

அதை ஒட்டி மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்க தொடங்கினர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்த விசாரணையில் சாமியார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் வருடம் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார்.

ஒரு சில தினங்களில் ஜாமினில் வெளிவந்த சாமியார் தலைமறைவாகி விட்டார் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் வட இந்தியாவில் வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் சதுர்வேதி சாமியார் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி உள்ளதாக பல தகவல்கள் வெளியாகின.

சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு சதுர்வேதி சாமியாரை தேடிக் கண்டுபிடிக்க காவல்துறையினர் மீண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலங்களுக்கு ஒரு காவல்துறைக் குழு அவரைத் தேட அனுப்பப்பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கடந்த 2016 ஆம் வருடம் முதல் சதுர்வேதி சாமியார் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றுவதால் அவரை பிடிக்க முடியவில்லை என் தெரிவித்துள்ளார்.