தஞ்சாவூர்:

ஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு  23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது. லட்சகக்கணக்கான பக்தர்கள் சம்போ சிவ சம்போ என்ற கோஷத்துடன் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

கோபுர கலசத்தில்  புனித நீர் ஊற்றியபோது  வானவெளியில் கருடன் பறந்ததால் பக்தர்கள் பரவசம் கொண்டு சிவனை  தொழுதனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…. என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவனை போற்றும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் இன்று வெற்றிகரமாகவும், விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்று முடிந்தது.

அகம விதிகள் படி சமஸ்கிருதத்திலும், தமிழறிஞர்களின் கோரிக்கைபடி தமிழிலும் வேத மந்திரங்கள் ஓத சரியாக காலை  9.30க்கு குடமுழுக்கு விமரிசையாக   நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டு பழைமையானதும், தமிழர் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக சோழப் பேரரசன் ராஜராஜன் கட்டியதுமான  தஞ்சைப் பெரிய கோயிலின் ராஜகோபுரம் உள்பட அங்குள்ள அனைத்து பரிவார்த்த மூர்த்தி களுக்கும் இன்று காலை திட்டமிட்டபடி புனித நீர் ஊற்றி  குடமுழுக்கு நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக கடந்த 1ந்தேதி முதல் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று அதிகாலை 4.30 மணி முதலே பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அதிகாலையிலேயே 8 வதுகால யாக பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  புனிதக் குடங்களில் எடுத்து வரப்பட்ட நீரால், பெரிய  கோவில் கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டதும, கோயிலின் கொடிமரம் உள்பட  பெரிய கோவில் வளாகத்தில் உள்ள  விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன், வாராஹி, சண்டிகேஸ்வரர் சந்நிதி விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.

கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப் பட்ட போது மேலே கருடன் வட்டமிட்டது. இதைக்கண்ட பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.  அப்போது, ‘கருட பகவான் வந்துவிட்டான்’ என ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். இதையடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள், கருட பகவானை வான் நோக்கி வழிபட்டனர்.

பெரிய கோயில்களின் குடமுழுக்கு விழாவின்போது, கருடன் பெரும்பாலும் கலசத்திற்கு மேலே வட்டமடிப்பது வழக்கம். இன்றும் கருடன் வட்டமிட்டது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.  பக்தர்கள் பக்தி பரவசத்துடன், ஓம் நமச்சிவாய என்றும், சிலர் சம்போ சிவசம்போ என்ற கோஷத்துடன்  அதனை தரிசித்து மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன. இதில், கோயில் உள் பிரகாரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் பங்கேற்று வழிபட்டனர்.

கோவிலின் வெளிப்பிரகாரம், கிரிவலப் பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் நின்று தரிசனம் செய்தனர். மேலும், சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீட்டு மாடியில் இருந்து கண்டுகளித்தனர்.

இதைத்தொடர்ந்து  இன்று மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக நகருக்குள் 175 வேன்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான  வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல 3 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.  ஏறத்தாழ 5,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை நேரடியாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்…

நன்றி: தஞ்சாவூர் வீடியோ..