மும்பை

டந்த 1996 ஆம் வருடம் ராஜ் தாக்கரே நடத்திய மைக்கேல் ஜாக்சன் நடன விழாவுக்கு  அளிக்கப்பட்ட வரி விலக்கை அரசு தற்போது உறுதி செய்துள்ளது.

கடந்த 1996 ஆம் வருடம் மும்பையில் மைக்கேல் ஜாக்சன் நடன இசை நிகழ்வு பிரம்மாண்டமாக நடந்தது.  இந்த நிகழ்வை தற்போதைய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவரான ராஜ் தாக்கரே நடத்தினார்,.  அப்போது அவர் சிவசேனாவின் துணை அமைப்பான சிவ் உத்யோக் சேனா வின் தலைவராக இருந்தார்.   இந்த காலகட்டத்தில் சிவசேனா கட்சி அரசில் பங்கு வகித்தது.

இந்த நிகழ்வுக்கு மகாராஷ்டிர அரசு கேளிக்கை வரி செலுத்த விலக்கு அளித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது.  இதையொட்டி ராஜ் தாக்கரேவின் சிவ் உத்யோக் சேனா அமைப்பு ரூ.3.36 கோடி ரூபாயை மகாராஷ்டிர அரசுக்கு அளித்தது.   பலமுறை இந்த வரி விலக்கை மீண்டும் உறுதிப்படுத்த ராஜ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தும் இது குறித்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிகழ்வு அந்த கால கட்டத்தில் மிகவும் பிரம்மாண்டமான நிகழ்வாகும்.  அத்துடன் ராஜ் தாக்கரேவின் முதல் பொது நிகழ்வாகவும் இது அமைந்தது.  இந்த விழாவை ஒரு கலாசார விழா என வர்ணித்த அப்போதைய சிவசேனா இதற்கு வரி விலக்கை அளித்தது.  ஆனால் சிவசேனா எதிர்ப்பாளர்களால் வழக்கு தொடரப்பட்டு இந்த வரி விலக்கு மும்பை உயர்நீதிமன்றத்தால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதையொட்டி ராஜ் தாக்கரே இந்த வரி விலக்கு உத்தரவை மீண்டும் அமல் படுத்தக்கோரி மனு அளித்திருந்தார்.  ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது இந்த வரி விலக்கு குறித்து சிவசேனா எடுக்கவிருந்த நடவடிக்கைகளுக்கு பாஜகவால் தடங்கல் ஏற்பட்டது.

அந்த மனு தொடர்பாக தற்போதைய மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர அரசு ராஜ் தாக்கரே நடத்திய நிகழ்வுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கை உறுதி செய்துள்ளது. இதற்கு தற்போது சிவசேனாவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.  இதன் மூலம் மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே செலுத்தியுள்ள ரூ.3.36 கோடி மீண்டும் அவருக்குக் கிடைக்க உள்ளது.