ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்று, முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சச்சின் பைலட் அசோக் கெலாட்டிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்.பி.ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்து சச்சின் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் சச்சின் ஜெயப்பூர் திரும்பினார்.

இந்நிலையில் வரும் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இதில் முதல்வர் அசோக் கெலாட் பெரும்பான்மை நிரூபிக்க உள்ளார். இதையடுத்து இன்று சச்சின் பைலட்டும், முதல்வர் அசோக் கெலாட்டும் நேருக்கு நேர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 30 நாட்களுக்கு மேல் நடந்துவந்த அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்தது.