சென்னை

சென்னையில் மூன்று மாதங்களாக வறண்டு போயிருந்த நீர்நிலைகள் தற்போது நிரம்பத் தொடங்கி உள்ளன.

சென்னை நகரின் முக்கிய நீர்நிலைகளான சோழவரம் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், புழலேரி, மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை கடந்த மூன்று மாதங்களாக வறண்டு போய் உள்ளன.  இதனால் சென்னை நகருக்குக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.   இதை சரி செய்ய அரசு பல முயற்சிகள் எடுத்து வந்தது.   இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் வறண்டு கிடந்த நான்கு நீர் நிலைகளும் நிரம்பத் தொடங்கி உள்ளன.   சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சோழவரம் ஏரிப் பகுதியில் 13.5 செமீ மழை பெய்துள்ளது.   இதனால் திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் பகுதியில் இருந்து 400 கியுசெக் தண்ணீர் வந்துக் கொண்டு இருக்கிறது.   இதே நிலை புழலேரி மற்றும் பூண்டி நீர் தேக்கத்திலும் உள்ளன.   செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து குறைவாக இருந்த போதிலும் அதுவும் நிரம்பி வருகிறது.

சென்னையின் சில பகுதிகளில் மழை நீர் சரியாக ஓடாமல் தேங்கி உள்ளது.  இது குறித்து சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் சென்னையின் பல வடிகால்களில் குப்பைகள் அடைந்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் சரி செய்யப்படும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் மழை நீரைச் சேகரிக்க 7100 மீள் கிணறுகள், 400 மூழ்கிய கிணறுகள்,  1100 நீர் சேமிப்பு பள்ளங்கள், மற்றும் 13000 சேகரிப்புக் குழாய்கள் சென்னைத் தெருக்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   மேலும் தற்போது மழைநீர் தேங்குவது குறித்து மிகவும் குறைவான புகார்களே வந்துள்ளதால் அவை மிக விரைவில் சரி செய்யப்படும் எனவும் பிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.