மூன்று வாரங்களுக்குப் பிறகு காட்சி தந்தார், வடகொரிய அதிபர் …

--

மூன்று வாரங்களுக்குப் பிறகு காட்சி தந்தார், வடகொரிய அதிபர் …

தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார், வட கொரிய அதிபர், கிம் ஜோங் உன்.

கடந்த மூன்று வாரங்களாக அவர் பொது வெளியில் காட்சி தரவில்லை.

இதையடுத்து அவரது உடல்நலம் பற்றிய வதந்திகள் றெக்கை கட்டிப்பறந்தன.

 ஆரம்பத்தில், ‘’இருதய ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறார். உடல் நிலை மோசம்’ என்று செய்தி வெளியிட்ட ஊடகங்கள், ஒரு கட்டத்தில் ‘’ கிம் ஜோங் இறந்து விட்டார்… அவருக்கு மாற்றாகப் பதவி ஏற்கப் பொருத்தமான அதிபர் தேடப்படுகிறார்’’ என்றும் வதந்தி பரப்பின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிம் ஜோங், நேற்று பொதுமக்கள் மத்தியில் நேரில் தோன்றியுள்ளார்.

வட கொரியத் தலைநகர் பியோங்காங் அருகே உள்ள சஞ்சோன் என்ற இடத்தில் நவீன உரத்தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது.

அதனை ’ரிப்பன்’ வெட்டி திறந்து வைத்த கிம் ஜோங் உன், தொழிற்சாலையைச்  சுற்றிப்பார்த்துள்ளார்.ஆலை செயல்படும் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.

‘’இப்படி ஒரு நவீன உரத்தொழிற்சாலை வடகொரியாவில் அமைக்கப்பட்டுள்ளது அறிந்தால், என் தந்தையும், தாத்தாவும் எவ்வளவு சந்தோஷம் அடைவார்கள்’’ என்று  அவர் உணர்ச்சி வசப்பட்டதாக கொரிய மத்திய நியூஸ் ஏஜென்ஸி ( கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது.

விழாவில் பங்கேற்ற திரளான மக்கள் அதிபரை  வாழ்த்தியும், முழக்கமிட்டும் வரவேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிபரின் சகோதரியும், அவரது அரசியல் ஆலோசகருமான கிம் யோ ஜோங், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கின் யோ ஜோங்-கை மாற்று அதிபராக ஊடகங்கள் சித்தரித்து செய்தி வெளியிட்டன, என்பது குறிப்பிடத்தக்கது. .

– ஏழுமலை வெங்கடேசன்