முப்பது ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு இந்திய அரிசி ஏற்றுமதி

பீஜிங்

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இந்திய அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடாகும்.   இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. கடந்த 2019-20 நிதி ஆண்டில் சுமார் ரூ.31000 கோடிக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.   தற்போதைய நிதி ஆண்டில் முடிவடைந்துள்ள ஆறு மாதங்களில் ரூ.8903 கோடிக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் அதிக அளவில் அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா வருடத்துக்கு சுமார் 40 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்கிறது.  இந்திய அரசியைத் தரமில்லை எனக் கூறி கடந்த 30 ஆண்டுகளாகச் சீனா ஏற்றுமதி செய்யாமல் இருந்தது.   இதையொட்டி தாய்லாந்து, வியட்னாம், மியான்மர், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சீனா அரசி இறக்குமதி செய்கிறது.

அந்த நாடுகளில் தற்போது அரிசி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது.  சீனாவின் முக்கிய அரிசி வழங்கும் நாடான தாய்லாந்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.  ஆகவே 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசியைச் சீனா கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது.   தற்போது ஒரு லட்சம் டன் அரிசியைக் கொள்முதல் செய்யச் சீனா ஒப்பந்தம் இட்டுள்ளது.

சமீபத்தில் லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் நடந்துள்ள நிலையில் இன்னும் பதற்றம் தணியாமல் உள்ளது.  இத்தகைய சூழலில் இந்திய அரிசியை சீனா இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.