டில்லி

காஷ்மீரில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1990 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தின் மூத்த குடிமக்களான காஷ்மீர் பண்டிட்டுகள் மீது கடும் தாக்குதல் நடத்தினார்கள்.   இந்த தாக்குதலில் உயிருக்குப் பயந்து தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை விட்டு விட்டு சுமார் 75000 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின.  இவ்வாறு வெளியேறிய சுமார் மூன்றரை லட்சம் பேர் நாட்டின் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்து தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலையை அடைந்தனர்.

காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகள் ஜனவரி 19 ஆம் தேதியைப் பேரழிவு தினமாக அனுசரித்து வருகின்றனர்.  இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் விது வினோத் சோப்ரா எடுத்துள்ள ஷிகாரா என்னும் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.   அதில் காஷ்மீர் பண்டிட்டுகளின் சமீபத்திய ஆசையான காஷ்மீருக்குத் திரும்பிச் செல்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

நேற்று காஷ்மீர் பண்டிட்டுகள் பேரழிவு தினத்தை அனுசரித்த போது தாங்கள் மீண்டும் காஷ்மீருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோ  பதிவில் இஸ்லாமிய தலைவர்களுக்கு, “நாங்கள் காஷ்மீருக்குத் திரும்பி வருகிறோம் நாங்கள் காஷ்மீரில் வாழவும், காஷ்மீரில் இறக்கவ்ம் விரும்புகிறோம்  எங்களது அஸ்தி காஷ்மீரில் ஓடும் விதஸ்தா நதியில் கரைக்கப்பட வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காஷ்மீர்  பண்டிட்டுகளின் அமைப்பான பனுன் காஷ்மீரின் தலைவர்களில்  ஒருவரான அக்னி சேகர், “கடந்த 30 வருடங்களாக எங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறி வசித்து வருகிறோம்.  கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி  மோடி செய்த விதி எண் 370 விலக்கம்,  குடியுரிமை சட்டட் திருத்தம் உள்ளிட்டவை  மீண்டும் நாங்கள் நாடு திரும்ப உதவி செய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.