சென்னை

சென்னை விஜிபி கடற்கரையில் கடந்த 37 வருடங்களாக சிலை மனிதனாகப் பணி புரியும் அப்துல் அஜிஸ் கொரோனா ஊரடங்கால் பணி மாற உத்தேசித்துள்ளார்.

சென்னையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் விஜிபி கோல்டன் பீச் ஒன்றாகும்.   இந்த கடற்கரை பகுதியின் நுழைவாயிலில் சிலை போல நிற்கும் வாயிற்காவலர் மிகவும் புகழ்பெற்றுள்ளவர் ஆவார்.    அவர் சிறிதும் அசையாமல் நிற்பதால் அவரை சிலை மனிதன் என அழைப்பது வழக்கமாகும்.  அவருக்குப் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.   அவரது இயற்பெயர் அப்துல் அஜீஸ் என்பதாகும்.

அப்துல் அஜீஸ் கடந்த 1985 ஆம் வருடம் இந்த பணியில் சேர்ந்துள்ளார்.  தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கால் இவருடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.    ஊரடங்கு காரணமாக அனைத்து பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டுள்ளன.   இவருக்கு பிப்ரவரி மாதம் முதல் பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.   மார்ச் மாதம் இவருக்குப் பாதி மாத ஊதியம் கிடைத்துள்ளது.

அதன்பிறகு 5 மாதங்களுக்கு ஊதியம் கிடையாது.  அக்டோபர் 1 அன்று மீண்டும் திறக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் இது நிச்சயமாக அறிவிக்கப்படவில்லை.   வறுமை காரணமாக அஜீஸ் தன்னிடம் உள்ள பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். பல மூத்த ஊழியர்களுக்கு தற்போது ஊரடங்கு காரணமாக ஊதியம் வழங்குவதில்லை எனக் கூறும் அஜீஸ் ஏற்கனவே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து நிர்வாக வேண்டுகோளுக்கு இணங்க பணியில் தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அஜீஸ், “நான் 1985 முதல் 37 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன்.  பல முறை இந்த பணியால் எனது உடல்நலம் கெடுவதால் வேலையில் இருந்து விலகுவதாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளேன்.  நான் ஆட்டோ ஓட்டுநராக விரும்பினேன்.  ஆனால் நிர்வாகம் என்னைச் சமாதானம் செய்து ஊதியத்தில் ரூ.2000 அதிகரித்து பணியில் தொடர வைத்தது.  தற்போதைய நிலையில் ஊதியம் இன்மையால் எனது பணியைத் தொடர முடியாத நிலை உள்ளதால் நான் வேறு பணிக்கு மாற உத்தேசித்துள்ளேன்.

சிலை மனிதனாக பணிபுரிவது எளிதானது இல்லை. எனது உணவுப் பழக்கத்தினால் நான் இதைச் சரிவரச் செய்து வருகிறேன்.  தினமும்  யோகாசனம் மற்றும் சில உடற்பயிற்சிகள் செய்வதால் 7 மணி நேரம் தொடர்ந்து சிலை போல் நிற்க முடிகிறது.   நிற்பது மட்டுமின்றி கண்களைச் சிமிட்டக் கூடாது.  உணவு நீர் எடுத்துக் கொள்ள முடியாது.  அவ்வளவு ஏன் கழிப்பறைக்குக் கூட செல்லாமல் ஒரு ஷோ ரூம் பொம்மை போல் நிற்க வேண்டும்.

இங்கு வருகை தந்த பிரபலங்களான மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், விக்ரம் மற்றும் அர்ஜூன் ஆகியோர் என்னை பாராட்டி உள்ளனர்.   வாடிக்கையாளர்களில் பலர் எனது கவனத்தைத் திருப்ப முயன்றாலும் நான் அப்படியே நிற்பேன்.   மேலே குறிப்பிட்ட நடிகர்கள் என்னைப் புகழ்ந்த போதிலும் நான் அதைக் கவனிக்காமல் சிலை போல் நின்றிருந்தேன்.” எனக் கூறி உள்ளார்.