5 நாட்களாக கடலில் தத்தளித்த 17 கேரள மீனவர்கள் மீட்பு

திருவனந்தபுரம்:

சூறாவளி காற்றில் சிக்கி கடந்த 5 நாட்களாக கடலித் தத்தளித்த கேரளா மீனவர்கள் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக தென் தமிழகம், கேரளாவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐ.என்.எஸ். கல்பேனி கப்பல் உதவியுடன் கடலில் இருந்த 13 மீனவர்கள் மீட்கப்பட்டு கொல்லம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதேபோல் விமான படை ஹெலிகாப்டர் உதவியுடன் காயம்குளம் மேற்கே 30 மைல்கள் தொலைவில் 4 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.