50 நாட்களுக்கு பிறகு மீண்டும் திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள்…

--
திருமலை:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. இந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், திருப்பதி கோவில் இன்று பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.
சமூக இடைவெளி, முகக்கவசம்  உள்பட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை கையாண்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 50 நாட்களுக்கு பிறகு இன்று கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டால், அங்கு கூட்டம் மோதியது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கி கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்  ரத்து செய்யப்பட்டது. தினசரி லட்சக்கணக்கானோர் குவியும் திருமலை கடந்த 50 நாட்களாக ஆட்கள அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருதை தொடர்ந்து, திருப்பதி கோவிலை திறக்கவும் மாநில அரசு தேவஸ்தானத்துக்கு அனுமதி வழங்கியது. அதன்படி கோவிலில் தினமும் 14 மணி நேரம் மட்டும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது, ஒரு மணி நேரத்துக்கு 500 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என்ற கணக்கில் பக்தர்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைப்பது, சிறப்பு தரிசனத்துக்கான அனுமதிச்சீட்டுகளை இணையம் வழி விற்பது, அதில் தரிசனத்துக்கான நேரத்தைக் குறிப்பிடுவது, தினமும் 7 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளைத் திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது.

மேலும் ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  திருமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும், திருமலையின் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 50 நாட்களுக்கு பிறகு இன்று ஏழுமலையான் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

இன்று அதிகாலை திருமலையில்ஆகம விதிகளின்படி திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு பூஜைகள் நடைபெற்று, வடை மற்றும் லட்டு நைவேத்தியமாக படைக்கப்பட்டது. அந்த வைத்தியங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

பக்தர்கள்  கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளி பின்பற்றி லட்டு மற்றும் வடை ஆகியவற்றை பிரசாதமாக வாங்கி சென்றனர்.