72 தினங்களுக்குப் பிறகு காஷ்மீரில் இன்று முதல் மொபைல் சேவை மீண்டும் தொடக்கம்

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் 72 தினங்களுக்குப் பிறகு இன்று போஸ்ட்  பெய்ட் மொபைல் சேவை தொடங்கி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்ட மத்திய அரசு காஷ்மீருக்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்டது.  அத்துடன் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.  இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் எங்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.  மாநிலம் முழுவதும் அனைத்து மொபைல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவைகளும் இணையச் சேவையும் அடியோடு முடக்கப்பட்டன.   இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.   ஆயினும் மத்திய அரசு தொலைத் தொடர்பு சேவைகளை அளிக்காமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் போஸ்ட் பெய்ட் மொபைல் சேவையை மீண்டும் அளிக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளது.  இன்று மதியம் 12 மணியில் இருந்து இந்த போஸ்ட் பெய்ட் மொபைல் சேவை தொடங்கி உள்ளது.   காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் இந்த சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.