8 ஆண்டுகளாக சுயநினைவில்லாமல் இருந்த கேரள சிறுவன் மரணம்

திருவனந்தபுரம்

டந்த 2011 ஆம் வருடம் ஒரு விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த இர்ஃபான் என்னும் சிறுவன் சுயநினைவு திரும்பாமல் இன்று மரணம் அடைந்தார்.

திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ளது கரிக்காகம் என்னும் பள்ளி.  இந்த பள்ளியில் கடந்த 2011 ஆம் வருடம் நர்சரி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த இர்ஃபான் மற்றும் அவருடைய வகுப்புத் தோழர்கள் மற்றும் அவருடைய ஆசிரியை உள்ளிட்ட 15 பேர் ஒரு வேனில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வேன் விபத்துக்குள்ளாகி திருவனந்தபுரத்தில் உள்ள மாசடைந்த பார்வதி புதனார் கால்வாயில் உருண்டு விழுந்தது.   அதில் ஆறு மாணவர்கள் மரணம் அடைந்தனர்.   அதில் மீட்கப்பட்டவர்களில் அப்போது 4 வயதான இர்ஃபானும் ஒருவர் ஆவார்.   அவர் மீட்கப்பட்ட போது அவரிடம் உயிர் உள்ளதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இர்ஃபானின் நுரையீரல் முழுவதும் கழிவு நீர் புகுந்ததால் அவருக்கு நிமோனியா காய்ச்சல் உண்டாகி மூச்சு விட முடியாமல் தடுமாறினார்.   அதன் பிரகு அவருடைய கழுத்தில் ஓட்டை இட்டு அவருடைய சுவாசம் சரி செய்யப்பட்டது.   வயிற்றில் ஒரு குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு உணவு செலுத்தப்பட்டது.

சில மாதங்களில் அவருடைய உடல் பாகங்கள் செயல் பட தொடங்கின.   ஆயினும் அவரால் எதையும் உணர முடியாமல்சுயநினைவை இழந்த நிலையில் இருந்தார்.    சுமார் 25 நிமிடம் அவர் அந்த கழிவு நீர் கால்வாயில் இருந்ததால் இர்ஃபானில் மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு சுய நினைவு திரும்பாமல் இருந்தார்.

இர்ஃபானின் தாய் சாஜின் மற்றும் தந்தை ஷாஜகான் ஆகிய இருவரும் தங்களிடம் உள்ள அனைத்து பணத்தையும் செலவழித்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.   இதை அறிந்த கேரள மக்களும் தங்களாலான பண உதவியை செய்தனர்.   அது மட்டுமின்றி இர்ஃபானின் தாய் தந்தை வசிக்க ஒரு வீடு கட்டி கொடுத்தனர்.

பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வந்து இர்ஃபானுக்கு தைரியம் அளிக்கும் வகையில் அவரை பார்த்து விட்டு சென்றனர்    அவர்களில் முக்கியமானவர் கேரள நடிகை மஞ்சு வாரியர்.   அவர் அடிக்கடி இர்ஃபானை பார்த்து விட்டு செல்வார்.   இர்ஃபான் சிகிச்சை பலனின்றி இன்று சுயநினைவு திரும்பாமலே மரணம் அடைந்துள்ளார்.

இந்த செய்தி கேரள் மக்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.