ரெயில் பயணியின் டுவிட்டால் உ.பி. ரயிலில் மீட்கப்பட்ட 26 மைனர் பெண் குழந்தைகள்
டில்லி:
ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரின் டுவிட்டர் பதிவு காரணமாக 26 மைனர் பெண் குழந்தைகள் ரயில்வே காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான சம்பவம் உ.பி. மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.
பீகாரை சேர்ந்த மைனர் பெண் குழந்தைகளான அவர்களை அழைத்துச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முஷாபர்புர் பந்த்ரா அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 5ந்தேதி பயணம் செய்த பயணி ஒருவர், அந்த ரயிலின் எஸ்5 கோச்சில் ஏராளமான சிறுவயது பெண் குழந்தைகள் பயணம் செய்வது வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பெண் குழந்தைகள் அழுதுகொண்டு இருப்பதாகவும், இது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாகவும் அந்த பயணி தெரிவித்திருந்தார்.
அவரது டுவிட்டர் பதிவு வைரலாகி, ரயில்வே காவல்துறைக்கும், மாநில காவல்துறைக்கும் சென்றது. இது குறித்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ரயில்வே காவல்துறையினர், ரெயில் செல்லும் வழியான கோரக்பூர், வாரணாசி மற்றும் லக்னோ ரயில்நிலையத்தில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர், குழந்தை கடத்தல் தடுப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து கோரக்பூர் ரயில் நிலையத்தில் அந்த அப்பாவி குழந்தைகள் ரயில்வே காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட பெண் குழந்தைகள் அனைவரும் 10 முதல் 14 வயது உடைய 26 மைனர் குழந்தைகள் என்பதும், அவர்கள் பீகாரின் மேற்கு சம்ப்ரான் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற விவரம் அவர்களுக்கு தெரியவில்லை.
அவர்களை 2 இளைஞர்களும், 55 வயதான நபர் ஒருவரும் சேர்ந்து அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தற்போது அரசின் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ரயில்வே காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.