டேராடூன்: உத்தராகாண்ட் மாநிலத்தில் மத்தியஅரசின் தளர்வுகளை ஏற்று கடந்த 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு  80 ஆசிரியர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக  84 பள்ளிகள் மீண்டும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல்  தடுப்பு நடவடிக்கையாக மத்தியஅரசு அறிவித்த பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. தற்போது தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு பள்ளிகளை கொரோனா நெறிமுறைகளுடன் திறக்கலாம் என அறிவித்தது. இதையடுத்து, பல மாநிலங்களில் நவம்பர் 2ந்தேதிமுதல் கல்விநிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், உத்தராகாண்ட் மாநிலத்தில்  மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 2-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. 4 நாட்களாகப் பள்ளிகள் செயல்பட்ட நிலையில் பாரி மாவட்டத்தில் உள்ள கிர்சு, பாரி, காட், பபோ மற்றும் கல்ஜிகால் பகுதிகளில் உள்ள 80 பள்ளி ஆசிரியர்களுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுது அந்த பகுதிகளில் உள்ள  84 பள்ளிகள் மீண்டும் மூட உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் அமித் நெகி , ”உத்தராகண்டின் 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.  கொரோனா பரவுவதைத் தடுக்க நிலையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கல்வித்துறைக்கு வெளியிட்டுள்ளது. அவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் பின்பற்ற வேண்டும் குளிர்காலம் என்பதால் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதாலும் மக்கள், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.