குர்கான்: அரியானா மாநிலத்தில் ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள்  பாதிக்கப்பட்டு உள்ளனர். வேலைக்கு செல்ல முடியாமலும், போதிய வருமானம் இன்றியும்  அவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு வறுமையால் அரியானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது பெயர் முகேஷ். குர்கான் அருகே உள்ள சரஸ்வதி கஞ்ச் பகுதியில் குடிசையில் வசித்து வருகிறார்.

மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளன. பெயிண்டரான அவர் தினசரி வேலைக்கு சென்று வந்தார். ஆனால் ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் முகேஷ் வறுமையில் தவித்தார். அதனால் அவர் தமது குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது செல்போனை ரூ.2500க்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தை கொண்டு குழந்தைகளுக்கு உணவு பொருட்களை வாங்கினார். மீதி பணத்தை மனைவியிடம் கொடுத்து இருக்கிறார். தொடர்ந்து வறுமையில் வாழ முடியாது என்று கருதி அவர் தற்கொலை முடிவை மேற்கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.