மணிப்பூர்:

ருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து மணிபூரும் கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், மிசோரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் விதிவிலக்காக திகழ்கின்றன. இந்தியா பல விநோத கலாச்சார மரபுகளையும், மாறுபட்ட புவியியல் கூறுகளையும் உள்ளடக்கிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் அடையாளமாக இருந்தாலும் கொரோனா பாதிப்பில் வேற்றுமையே இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா பகுதிகளிலும் அதன் தாக்கம் கணிசமாக உயர்ந்து வருகிறது.ஆனால், வடகிழக்கு மாநிலங்களின் கொரோனா நிலவரம் வேறு வகையில் உள்ளது. அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதுக்கும் குறைவாக உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 12 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்கள் கடந்த 14 நாட்களில் ஒருவர் கூட கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 36 உயிரிழப்புகள் மற்றும் 957 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 792-ஆக இருப்பதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 448-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பஞ்சாபில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட லூதியானா உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர்,  10 நாள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரே நபரும் குணமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பேமா காண்டு டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அருணாச்சல் பிரதேசம் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.