ஆயுதப் பயிற்சி அளித்த பஜ்ரங் தள் தலைவர் கைது!! உ.பி. கவர்னர் வக்காலத்து

லக்னோ:

பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் மகேஷ் மிஸ்ரா அயோத்தியில் தனது குழுவினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது தொடர்பான வீடியோ வெளியானது.

இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இரு மதத்தினர் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுய பாதுகாப்பு என்ற தலைப்பில் கடந்த மாதம் 10ம் தேதி உ.பி. மாநிலம் அயோத்தியில் பதிவு செய்யப்பட்ட ஆயுதப் பயிற்சி தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வளை தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 50 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி மோகித் குப்தா தெரிவித்துள்ளார்.

வி.ஹெச்.பி அமைப்பின் இளைஞர் அமைப்பு பஜ்ரங் தள் ஆகும். ‘‘நாங்கள் சுய பாதுகாப்பு மற்றும் பெண் பாதுகாப்பு குறித்த பயிற்சியை அளிக்கிறோம். இதர சமூக மக்கள் இதை வரவேற்றுள்ளனர்’’ என்று வி.ஹெச்.பி தலைடர் ரவி அனாந் தெரிவித்தார்.

உ.பி. கவர்னர் ராம் நாய்க் கூறுகையில், ‘‘ இந்த பயிற்சி சட்டத்திற்கு உட்பட்டதாகும். சுய பாதுகாப்பு இல்லாதவர்கள் நாட்டை காப்பாற்ற முடியாது. இதில் எவ்வித தவறும் இல்லை. இதில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் முழுக்க முழுக்க சுய பாதுகாப்புக்காக பெறப்பட்ட பயிற்சியாகும்’’ என்றார்.

கவர்னரின் இந்த கருத்துக்கு கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தாகாரத் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை கவர்னர் மீறியுள்ளார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.