சென்னை,

மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னையால்  பிஎஸ் 3  தரச் சான்று இருக்கும் வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

இந்தத் தரச்சான்று உள்ள சுமார் 6.71 லட்சம் வாகனங்கள் சந்தையில் இருக்கின்றன. அதனால் அவற்றை தள்ளுபடி விலையில் விற்க ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதிகபட்சமாக வாகனங்களுக்கு ரூ.12,500 தள்ளுபடி வழங்குகின்றன.

ஹோண்டா  நிறுவனம் பிஎஸ் 3 தகுதி சான்று பெற்றிருக்கும் அனைத்து வாகனங்களுக்கும் ரூ.10,000  தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது.  ஆனால் நேற்று மாலை திடீரென தள்ளுபடியை ரூ.22,000 வரை உயர்த்தியது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் டீலர்கள் கூற்றுபடி ஸ்கூட்டர்களுக்கு ரூ.12,500-ம், பிரீமியம் ரக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.7,500 ஆரம்ப நிலை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டிவிஎஸ், சுசூகி மற்றும் யமாஹா ஆகிய நிறுவனங்களும் தள்ளுபடியை அறிவித்திருக்கின்றன. டிவிஎஸ் நிறுவனம் 3,000 ரூபாயும், யமஹா நிறுவனம் 10,000 ரூபாயும் தள்ளுபடி வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுசுகி நிறுவனம் 4,000 ரூபாய் தள்ளுபடி வழங்கி இருக்கிறது. தவிர இலவச காப்பீடு, ஹெல்மெட், உதிரி பாகங்கள் என ஒவ்வொரு நிறுவனம் கூடுதல் சலுகைகளையும் வழங்கி இருக்கிறது.

பேருந்துகள், கனரக லாரிகள், விலையிலும் அதிகளவில் சரிவு காணப்படுகிறது.

இருசக்கர விற்பனை வரலாற்றில் இதுவரை இவ்வளவு தொகை தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது.