நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்யப்போகிறீர்கள்: உயர்நீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கில் விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகளை செயல்படுத்தப்பட்டு இருப்பதாக  மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, “நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்யப்போகிறீர்கள்? இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் உண்பதற்கு கல்லும், மண்ணும் மட்டுமே மிஞ்சும்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

“விவசாய நிலங்கள், ஏரிகள் போன்றவை  மனைகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதையும்  யாரும் எதிர்க்கவில்லை ஆனால் எட்டு வழிச்சாலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்று மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.