லக்னோ:

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து லக்னோவில் குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும் பணியை அகிலேஷ் யாதவ் தொடங்கியுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் லக்னோவில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். இதேபோல் இவரது தந்தை முலாயம் சிங் யாதவும் அரசு பங்களாவில் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் தங்கியுள்ளார். இரு அரசு பங்களாவையும் காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து ஜூன் 1ம் தேதிக்குள் காலி செய்யுமாறு இருவருக்கும் மாநில அரசு கடந்த 17ம் தேதி நோட்டீஸ் வழங்கியது.

இந்த பங்களாவை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அகிலேஷ் யாதவ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கெடு முடிவடைவதால் அரசு பங்களாவை காலி செய்யும் பணியை அகிலேஷ் யாதவ் தொடங்கிவிட்டார். இதேபோல் முலாயம் சிங்கும் பங்களாவை காலி செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாவை காலவரையின்றி அனுபவித்துக் கொள்ளும் சட்டத்தை அகிலேஷ் தலைமையிலான அரசு கொண்டு வந்தது. ஆனால், தேர்தலில் பாஜக.விடம் தோல்வி அடைந்தது. தற்போது தந்தை மற்றும் மகனின் கனவுகளை உச்சநீதிமன்றம் தகர்த்தெறிந்துவிட்டது. இருவரும் உடனடியாக பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.