சரிந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை

டெல்லி:

பணமதிப்பிழப்பு அமலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பின் நோக்கி சென்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரியில் மட்டும் 21.3 சதவீத பின்னடவை டிஜிட்டல் பண பரிவர்த்தனை சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர், ஜனவரியில் இந்த பின்னடைவு 9.1 சதவீதமாக இருந்தது. இந்த புள்ளிவிபரங்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை பின்னடைவை சந்திருப்பதன் மூலம் ரொக்க பரிமாற்றம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. கடந்த 2 மாதங்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறைந்து வருவது மத்திய அரசின் ரொக்கமில்லா பரிவர்த்தனை கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளது.

காசோலை பரிமாற்றம், டெபிட், கிரெடிட் கார்டுகளை விற்பனை முணையத்தில் பயன்படுத்துதல், மொபைல் பேங்கிங் போன்றவை குறைந்துள்ளது. பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் ரொக்கத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறைந்துள்ளது.

21.3 சதவீதம் குறைந்து அதாவது ஜனவரியில் 870 மில்லியனில் இருந்து 684 மில்லியன் ரூபாய் என்ற நிலையை பிப்ரவரியில் அடைந்துள்ளது. இதேபோல் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் ரூ. 97 ஆயிரத்து 11 மில்லியனாக இருந்தது. தற்போதை பிப்ரவரியில் இந்த தொகை 80 ஆயிரத்து 765 மில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இது 16.7 சதவீத வீழ்ச்சியாகும்.

கடந்த டிசம்பரில் இருந்து ஜனவரியில் 6.8 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளது. ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் பிப்ரவரியில் 3 நாட்கள் குறைவு. இதன் மூலம் மக்கள் தங்களது பாரம்பரிய ரொக்க முறைக்கு மாறியுள்ளனர் என்பதை காட்டுகிறது.

மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாற பணமதிப்பிழப்பு அறிவிப்பு ஒரு பெரிய வாய்ப்பாகும். ரொக்கம் எளிதாக கிடைக்க தொடங்கியவுடன் மீண்டும் பண பரிமாற்றத்திற்கு மக்கள் சென்றுவிட்டனர்.

ரொக்கம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் என இரண்டுமே எளிதானது தான். எனினும் ரொக்க பரிமாற்றத்திற்கு எவ்வித விலையும் கிடையாது. டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. அதனால் பண புழக்கம் அதிகரித்தவுடன் ரொக்க பரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவிட்டனர். கொள்கை முறிவு ஏற்பட்டால் தான் டிஜிட்டல் பரிவர்த்தனை பழக்கமாக மாறும்’’ என்றார் அவர்.

பிப்ரவரியில் என்இஎப்டி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தன 20.4%, செக் மூலம் 22.9% வீழ்ச்சி அடைந்துள்ளது. ஸ்வைப்பிங் மெஷின் மூலம் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு 28.3 சதவீதமும், மொபைல் பாங்கிங் மூலம் 20.7 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவை சந்தித்துள்ளது.

இதே ஜனவரியில் செக், என்இஎப்டி மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு பயன்பாடு டிசம்பரை விட குறைவாக இருந்துள்ளது. டிசம்பரை விட செக் பயன்பாடு 2.8 சதவீதமும், என்இஎப்டி 1.5 சதவீதமும், கார்டு பரிவர்த்தனை 7.8 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு நவம்பர் 8ம் தேதி வெளியான பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டது.

டிசம்பரில் இந்த பயன்பாடு உச்சத்தில் இருந்தது. அப்போது 957 மில்லியனாக இருந்த பரிமாற்றம் பிப்ரவரியில் 684 மில்லியனாக குறைந்துவிட்டது. பண தட்டுப்பாடு, ஊக்கத் தொகை அறிவிப்பு போன்றவற்றை மீறி இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.