வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் சந்திப்பு தாமதம்…..நிர்மலா சீத்தாராமனை மட்டும் அமெரிக்கா அனுப்ப இந்தியா மறுப்பு

டில்லி:

இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் ஒரே நேரத்தில் சந்தித்து பேசும் கூட்டம் ஜூலை 6ம் தேதி வாஷிங்டன்னில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் டெலிபோன் மூலம் பேசியபோது இரு துறைகளின அமைச்சர்கள் ஒரே நேரத்தில் சந்தித்து பேசும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வரும் 6ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த சந்திப்புக்காக அமெரிக்கா செல்ல வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் திட்டமிட்டிருந்தனர். இரு நாட்டு ராணுவம் மற்றும் வெளியுறவு தொடர்பான உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் பேச திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக்கேல் போம்பியோ அன்று வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போம்பியோ சுஸ்மாவுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்தார். எனினும் நிர்மலா சீத்தாராமன் திட்டமிட்டப்படி பயணத்தை மேற்கொள்ளலாம். அவர் பாதுகாப்பு துறையுடன் அமெரிக்காவில் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. நிர்மலா சீத்தாராமன் மட்டும் சென்று சந்தித்து பேசினால் அதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. எனினும் இரு நாடுகளில் இரு துறை அமைச்சர்களின் அடுத்த சந்திப்பு தேதி வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த சந்திப்பு டில்லியில் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.