கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் அம்மா உணவகத்தை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

64 கோடி இட்லிகள், 29 கோடி சப்பாத்திகள் மற்றும் 21 கோடி பல்வகை சாதம் ஆகியவற்றை விற்பனை செய்த பின்னர், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சென்னை மாநகராட்சி சார்பில், உணவகத்தை நிதி பற்றாக்குறை இன்றி தொடர்ந்து நடத்திட வழிவகை செய்யப்பட உள்ளது.

கார்பரேட் சமூக நன்கொடை மற்றும் பிற நிதிகளை பெறும் வகையில் அம்மா உணவகத்தை ஒரு அறக்கட்டளையின் கீழ் கொண்டுவர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், நன்கொடை அளிக்கும் நபர்கள் வரிவிலக்கு பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.

அம்மா உனவகத்தின் பின்னால் உள்ள சமூக நோக்கத்திற்கும், அவற்றின் நிதி பரிமாணத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வரவு ஒன்று மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனினும் இவ்விவகாரம் அரசின் கூடுதல் கவனம் பெறும் விவகாரமென்பதால், விளக்கம் அளிக்க அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.

அம்மா உணவகத்தின் உள்ளே உள்ள காலி இடங்களில் டீ மற்றும் காபியை குறைந்த விலையில் விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கைவினைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கும், விளம்பரம் வைப்பதற்காக அரசு நிறுவனங்களுக்கு மீதம் உள்ள இடத்தை வாடகைக்கு விடுவது தொடர்பாகவும் கூட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், பிரதான ரியல் எஸ்டேட் தொழில் பகுதியில் பல உணவகங்கள் அமைந்துள்ளதால், இதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என நம்புவதால் இதை பரிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது ரூ.1க்கு இட்லி, ரூ.3க்கு பலவகை சாதம், ரூ. 5க்கு சப்பாத்தி அளித்து வரும் அம்மா உணவகம் ஆண்டுக்கு ரூ. 30 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. ஏனெனினும், அம்மா உணவகத்திற்கு செலவிடப்படும் தொகை மட்டும் ஆண்டுக்கு 130 முதல் 140 கோடியாக இருக்கிறது. இதனால் மாநகராட்சிக்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இவற்றை தவிற்க உணவுகளின் விலையை உயர்த்தும் முடிவு எதுவும் அரசிடம் இல்லை என்று தெரிவிக்கும் அதிகாரிகள், மாநில அரசின் நிதியில் இருந்து ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் உணவு இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்காக இத்திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது பணம் ஈட்டுவதற்கான திட்டம் இல்லை என்று அரசு தரப்பில் அப்போதே தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், இத்திட்டம் டில்லி, ஜார்கண்ட், ஓடிசா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு முன்னுதாரனமாக திகழ்கிறது. ஆனால் தற்போது ஜெயலலிதா இருந்தவரை மட்டுமே உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டதாக இப்போது பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில், உணவின் தரத்தை உயர்த்த மாநகராட்சி கீழ் குழு ஒன்று அமைக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு, தரம் உயர்த்த வழிவகை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

உணவகத்தை பார்வையிட்ட அதிகாரிகள், உணவு பட்டியலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும், அதிலும் குறிப்பாக பலவகை சாதத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தால் அதை செய்ய முடியவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மேயர் சைதை துரைசாமி, “இளநீர் உற்பத்தி மையங்களில் இருந்து மாநகராட்சி இளநீரை பெற்று, அதை குறைந்த விலையில் உணவகங்களில் விற்பனை செய்யலாம். 1 ரூபாய்க்கு வழங்கப்படும் 1 கிலோ அரிசியிலேயே 66 இட்லிக்களை சுட முடியும். இதன் மூலம் 66 ரூபாயை வருமானமாக உணவகம் ஈட்ட முடியும். அம்மா உணவகத்தை கூடுதல் கவனம் கொண்டு சரியாக மேற்பார்வை செய்தால், நிதி பற்றாக்குறைக்கான வாய்ப்பே இல்லாத நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்.