சிபிஐ இயக்குனர்களியே மோதல்: சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா சஸ்பெண்டு?

டில்லி:

சிபிஐ இயக்குனர்களியே  ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவை  சஸ்பெண்டு செய்ய சிபி இயக்குனனர் வெர்மா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பான,  மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI)  1963ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. மத்திய அரசின்  பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் நடுவண் புலனாய்வுச் செயலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த  மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குனராக இருக்கும் அலோக் வெர்மா, மற்றும் சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தற்போது சந்தி சிரிக்கிறது.

சிபிஐ என்றாலே மக்களிடையே பிரமிப்பை ஏற்படுத்திய இந்த அமைப்பிலும் லஞ்ச லாவண்யம்  புரையோடி இருப்பது தெரிய வந்துள்ள நிலையில்,  சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டு சிபிஐ அலுவலகத்தினுள்ளேயே ரெய்டு நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது வெட்க கேடான செயல் என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

சதிஷ் சனா என்கின்ற ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரை சிபிஐ பணமோசடி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, அவரிடம் அஸ்தானா இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக, சதிஷ் சனா,  அஸ்தானா மீது புகார் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து சனாவிடம் நடைபெற்ற விசாரணையின்போது,  டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை, அஸ்தானாவுடன் தொடர்பு வைத்திருக்கும் இடைத்தரகரிடம் லஞ்சப் பணம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. சனாவின் வாக்குமூலம் காரணமாக,  இடைத்தரகரான மனோஜ் பிரசாத் கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய நண்பர் சோமேஷ் மற்றும் மனோஜ், ஆகியோரையும் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையிர் மத்திய அரசுக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர்,  அஸ்தானா குறித்து எழுதிய கடிதத்தில் அலோக் வெர்மா, ‘விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய நபர்’ என்றும்,  ‘சிபிஐ தலைவர் அலோக் வெர்மா தான் சனாவிடமிருந்து லஞ்சப் பணம் வாங்க முயன்றார்  என்று குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அஸ்தானா புகார் மீதான குற்றச்சாட்டு குறித்து, அவருடன் பணிபுரிந்து வந்த  சிபிஐ அதிகாரி தேவேந்திர குமாரை, சிபிஐ கைது செய்தது. அதைத்தொடர்ந்து,  சிபிஐ, அதன் அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் சோதனை நடத்தியது. அஸ்தானாவுடன் நெருக்கமாக இருந்த சிபிஐ அதிகாரிகளின் அறைகள் சோதனையிடப்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் அஸ்தானா மீது லஞ்ச புகார் கூறி, எப்.ஐ.ஆர் பதிவு செய்தது சிபிஐ.

சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அஸ்தானா  குற்றம் சாட்டி உள்ளார்.. இருவரும் ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரி வீசி சிபிஐ அமைப்பை அசிங்கப்படுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.

இதையடுத்து,  இருவருக்கும் சம்மன் அனுப்பி பிரதமர் மோடி விசாரணை நடத்தினார்.  அதைத்தொடர்ந்து, சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, அமைப்பின் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவை சஸ்பெண்டு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.