ஆசியாநெட், மீடியாஒன் ஊடகங்களில் டெல்லி வன்முறைக்காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பு

டெல்லி:

லைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் நடைபெற்ற கலவரக்காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசியானெட் மற்றும் மீடியாஒன் மீண்டும் அந்த காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன…இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீடியாஒன் மற்றும் ஏசியானெட் ஆகிய 2 தொலைக்காட்சி ஊடகங்களுக்கு  48 மணி நேரம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இது  ஊடகத்துறையினரையிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசு ஊடகத்துறையினரை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடந்தவாரம் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஐ நெருங்கியுள்ளது.

இந்த வன்முறை தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.  கேரளாவை தலைமையிடமாக கொண்டுள்ள “ஏசியாநெட் நியூஸ்” மற்றும் “மீடியா ஒன்” ஆகிய இரண்டு பிரபல செய்தி சேனல்கள், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து ஒருதலைபட்ச மாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பக்கபலமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், தடையை மீறி செய்தி ஒளிபரப்பி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டி உள்ளது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை 7.30 மணி முதல் மார்ச் 8ம் தேதி இரவு 07.30 மணி வரையிலான 48 மணி நேரம் சேனல் ஒளிபரப்பிற்கு தடை விதித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இரண்டு சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஏசியானெட் ஒரு சமூகத்துடன் இணைந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், மீடியாஒன் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் மற்றும் டில்லி காவல்துறையை விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு சேனல்களும் ஒரு சமூகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும், உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டன.

ஆனால்,  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏசியானெட் நியூஸுக்கு 48 மணி நேர தடை விதித்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, மலையாள செய்தி சேனல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. இன்று அதிகாலை, சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஏசியானெட் நியூஸ் மீண்டும் ஒளிபரப்பப்பட்டபோது, ​​மீடியாஒன் காலை 9.40 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இடையில் ஊடகங்கள் தரப்பில் உள்துறை அமைச்சகத்தை அணுகியதாகவும், அதன்பிறகே ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய மீடியா ஒன் சேனல் ஆசிரியர் சி.எல். தாமஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இது  நியாயமான பத்திரிகையை நிறுத்துவதற்கான உத்தரவு தவிர வேறில்லை. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் சுமத்தப்பட்ட முன்னோடியில்லாத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக மீடியாஒன் போராடும் ”என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் அவர்களால் நிறுவப்பட்ட நிதி சேவை நிறுவனமான ஜூபிடர் கேப்பிட்டலுக்கு ஏசியானெட் நியூஸ் சொந்தமானது. மீடியாஒன் ஒரு ஊடகக் குழுவான மாதயம் பப்ளிகேஷ னுக்கு சொந்தமானது, இது கேரளாவில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.  டெல்லியில் ஒரு மலையாள சேனல் எவ்வாறு வன்முறையைத் தூண்டக்கூடும் என்றும், இதுபோன்ற முடிவுக்கு அமைச்சகம் எவ்வாறு வந்துள்ளது என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கேரள எம்.பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சஷி தரூர்,  டெல்லியில் மதவெறி உணர்ச்சிகளை மலையாள சேனல்கள் எவ்வாறு பூமியில் தூண்ட முடியும்? அதேசமயம், Ré-pubic & TimesCow போன்ற உண்மையிலேயே மோசமான பிரச்சார சேனல்கள் தங்களது வெட்கக்கேடான சிதைவுகளைத் தொடர்கின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்தீப் சர்தேசாய், டெல்லி கலவரம் குறித்து அறிக்கை அளித்ததற்காக, மலையாளம் சேனல்களான ஏசியானெட் மற்றும் மீடியாஒன் ஐ 48 மணி நேரம் தடைசெய்தது தவறானது,  அரசாங்க ஊதுகுழல் சேனல்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.