ஜெ., மறைவுக்கு பின் தமிழகத்தில் ஊசலாடும் அதிமுக அரசு

சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் என்ற நிலையிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்….

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசு கடந்த ஒரு வருட காலமாக சட்டப்பூர்வ தன்மையுடன் செயல்பட்டாலும், அது தனது சொந்த பலத்தில் செயல்படவில்லை. ஒரு சீலிங் ஃபேன் போல் சுழன்று கொண்டிருக்கும் இந்த அரசு ஸ்விட்சை நிறுத்திவிட்டால் என்ன ஆகுமோ அது போன்ற நிலையில் தான் உள்ளது.

18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த தீர்ப்பு சபாநாயகர் முடிவுக்கு எதிராக இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்து நிலவுகிறது. இதன் காரணமாக தற்போதைய அரசு நீடிக்குமா அல்லது கலைக்கப்பட்டுவிடுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த தீர்ப்பின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற சூழல் நிலவவில்லை. 18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்தால், அவர்கள் மீண்டும் எம்எல்ஏ.க்களாக இருப்பார்கள். அதேசமயம் அவர்கள் 18 பேரும் அரசுக்கு எதிராக கூட்டாக வாக்களித்து ஆட்சியை கவிழ்க்க முடியாது.

அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று அறிவித்தால் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும். அதனால் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட முடியாது. அதனால் அடுத்து வரும் தேர்தலில் தான் தமிழக மக்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம் பலபிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.

ஆக்கப்பூர்வ பொருளாதார செயல்பாடு இல்லை. முதலீடு வீழ்ச்சியால் தொழில் துறையில் வளர்ச்சி இல்லை. காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்த கல்வி முறை இல்லை. 79 சதவீத 5ம் வகுப்பு மாணவர்களால் ஒரு சாதாரண வகுத்தல் கணக்குக்கு தீர்வு காண முடியவில்லை. குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரும்பான்மையுடன் கூடிய, நேர்மையான மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசு அமைய தமிழகம் காத்திரு க்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்படும் திட்டங்கள், கொள்கைகள் அடிப்படையில் அரசை தேர்வு செய்ய வேண்டும். பொறுப்புள்ள எதிர்கட்சியையும் கொண்டு வர வேண்டும். அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாத, ஏறக்குறைய நடுநிலையான அதிகாரிகள் வர்க்கம் தமிழகத்தில் இருந்தது. இது பாரம்பரியமாக பராமரிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சமீபகாலமாக பணம் மற்றும் அதிகார ஆசையில் அதிகாரிகள் இரு பக்கமும் பலனடையும் நிலை உருவாக்கி பாரம்பரியத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டனர். இந்த அவலத்தை நீக்க கூடியவர் எப்போது வருவாரோ? என்ற ஏக்கம் தமிழகத்தில் உள்ள ஆண், பெண் என இருபாலரிடமும் உள்ளது. அவ்வாறு மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும், சுய புகழ்ச்சி பாடுதல் இன்றி ஒரு ஆணோ, பெண்ணோ வந்துவிட்டால் அவர்தான் ஆசீர்வதிக்கப்பட்டராக மக்களால் கருத்தப்படுவர்.