டெல்லி: பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் வரும் 10 நாட்கள் வரை பயணிகளை அமர வைக்கலாம் என்று மத்திய அரசுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கும் உச்ச நீதிமன்றம்  அனுமதியளித்தது.
ஏர் இந்தியா விமானத்தின் விமானி தேவன் கனணி மும்பை உயர் நீதி மன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், நடுப்பகுதி இருக்கையை நிரப்பாமல் விமானத்தை இயக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ஜூன் 2ம் தேதிக்குள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நடுப்பகுதி இருக்கையை நிரப்பத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தவிட்டது.
தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசும், விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் அவசர மனுவைத் தாக்கல் செய்தன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏஎஸ். போபண்ணா, ஹிர்ஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் காணொலி மூலம் வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா,  ஜூன் 6 வரை நடுப்பகுதி இருக்கை உள்பட அனைத்து முன்பதிவும் முடிந்துவிட்டது என்றார். இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியதாவது:
நடுப்பகுதி இருக்கையிலும் பயணிகள் அமர்ந்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும்? இது வைரசுக்கு தெரியுமா? எந்தப் பயணியும் பாதிக்கப்படாமல் இருப்பார்களா? சமூக விலகல் இல்லாமல் அமர்ந்திருந்தால் நிச்சயம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கும்.
ஜூன் 6 வரை அதாவது அடுத்த 10 நாட்கள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமர வைத்துக் கொள்ளலாம். அதன்பின் அமர வைக்கக் கூடாது. நடுப்பகுதி இருக்கையை முன்பதிவில் காட்டக்கூடாது.
மக்கள் நலன், பயணிகளின் நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏர் இந்தியா மட்டுமல்லாமல், மற்ற விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.