டில்லி

ர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் 107 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடந்த கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 உறுப்பினர்களுடன் அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சியாக விளங்கியது. ஆயினும் அக்கட்சி அமைத்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலேயே கவிழ்ந்தது. அதை ஒட்டி மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தன. .

தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் 10 பேர் பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தஞ்சம் புகுந்தனர். அதன் பிறகு அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியதும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்ததும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இந்த அணி மாற்றம் குறித்த செய்திகளுக்கு இடையே கோவாவில் 15 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் உள்ளிட்ட பல பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆயினும் பாஜக தலைமை இதுகுறித்து எவ்வித கருத்தும் சொல்லாமல் உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் முகுல் ராய், “மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினர்களில் 107 பேர் வெகு விரையில்  பாஜகவில் இணைய உள்ளனர். இவர்கள் திருணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களை தவிர பல மாநில மற்றும் மாவட்ட அளவிலான திருணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் கட்சியை விட்டு விலக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.