கேரளாவை தொடர்ந்து நாகாலாந்தில் கடும் வெள்ள பாதிப்பு…ரூ.800 கோடி சேதம்

கோஹிமா:

கேரளாவை தொடர்ந்து நாகலாந்தில் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்கு ரூ.219 கோடி தேவை என அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலயே நிலைக் குலைந்து காணப்படுகிறது. நிதியுதவிகளை எதிர்பார்த்து கேரளா காத்து நிற்கிறது. இதேபோல் கர்நாடகாவில் வெள்ளப் பெருக்கால் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகாலாந்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ. 800 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாகலாந்துக்கு அண்டை மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றது.

400 கிராமங்களில் வசித்து வந்த 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். நாகாலாந்து மாநிலத்திற்கு மத்திய அரசு உடடியான வெள்ள நிவாரண நிதியாக ரூ. 219 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நெப்யூ ரியோ கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்-வர் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாகலாந்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், நிவாரண உதவிகள் மேற்கொள்ளும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது.