சதத்துடன் தொடங்கி சாதனையுடன் முடித்த பிரித்வி ஷா…!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தி, இந்திய அசுர வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அசத்தியுள்ளார். அறிமுக டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியலில் பிரித்வி ஷாவும் இடம் பெற்றுள்ளார்.

prithvi

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி, 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 72 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, பிரித்வி ஷா, ராகுல் கைகொடுக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இளம் வீரரான பிரித்வி ஷா (33) இப்போட்டியின் வெற்றி ரன்களை அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இளம் வயதில் அணியின் வெற்றி ரன்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் பிரித்வீ ஷா. பிரித்விஷா 18 வயது 339 நாட்களில் இம்மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (18 வயது 198 நாட்கள்) டெஸ்ட் அரங்கில், அணியின் வெற்றி ரன்களை அடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். இந்நிலையில் தனது அறிமுக தொடரிலேயே தொடர் நாயகன் வென்ற வீரர்கள் பட்டியலில் பிரித்வி ஷா 10வது இடம் பிடித்தார்.

அறிமுக டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலி, ரவிசந்திர அஷ்வின், ரோகித் சர்மாவை தொடர்ந்து பிரித்வி ஷாவும் இடம் பெற்றார்.