டெல்லி:

பகுஜன் மாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதியை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு, டெல்லி தலைமைச் செயலாளர் குட்டி மூலம் முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

உ.பி.தேர்தலில் படுதோல்வி அடைந்த மாயாவதி வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டி, வாக்குச்சீட்டு மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருந்தார். மாயாவதியை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலும் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்.

இதேபோல் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜம் மகேனும் வாக்குச்சீட்டு மூலம் உள்ளாட்சி தேர்தல் நடத்த கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் பஞ்சாப் தேர்தலில் லாம்பி தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுடன் தோல்வியடைந்த ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ஜர்நெயில் சிங்கும், உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், பஞ்சாப் தேர்தல் முடிவில் எங்களுக்கு பயங்கர சந்தேகம் உள்ளது. லாம்பி தொகுதியில் பல கிராமங்கள் உள்ளது. அந்த பகுதிகளில் எங்களிடம் உள்ள தன்னார்வலர்களின் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகள் குறைவாக உள்ளது. வாக்களித்ததற்கான அத்தாட்சி வழங்கும் முறை வெள்ளோட்டமாக பஞ்சாப்பில் பயன்படுத்தப்பட்டது. இதோடு உள்ள எண்ணிக்கையையும், பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வலியுறுத்தியும் தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்’’ என்றார்.

‘‘பஞ்சாப்பில் 33 தொகுதிகளில் அத்தாட்சி வழங்கும் முறை பயன்படுத்தப்பட்டது. இதோடு பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார் க்கும் படி வலியுறுத்தப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆதாரங்கள் கிடைத்தவுடன் முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்கப்படும்.

அத்தாட்சி வழங்கப்பட்ட துண்டு சீட்டுகள் ஒரு பெட்டியில் போடப்படுகிறது. இதை எண்ணி பார்க்க வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் வலியுறுத்தினர். ஆனால், இதை எண்ணிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எண்ணிக்கையை தெரிவிக்காமல் சென்றுவிட்டனர்’’ என்று ஆம்ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர்.