டில்லி

பேட்டால் அதிகாரிகளை தாக்கிய ஆகாஷ் விஜய்வர்கியாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததை ஒட்டி பாஜக தலைமை அவருக்கு நோட்டிஸ் அனுப்ப உள்ளது.

மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் மத்திய பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினருமான ஆகாஷ் விஜய்வர்கியாவின் தொகுதியில் ஒரு ஆக்கிரமிப்பை அகற்ற அரசு அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது ஆகாஷ் விஜய்வர்கியா அந்த அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டினார். அதை ஒட்டி கைது செய்யப்பட்ட ஆகாஷ் ஜாமீனில் வெளி வந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி, ஆகாஷ் விஜய்வர்கியாவின் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆகாஷ் யாருடைய மகனாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஆகாஷ் ஜாமீனில் வெளிவந்த போது அவருக்கு கோலாகல வரவேற்பு அளித்தவர்கள் மீதும் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இன்று பாஜக மூத்த தலைவர் ஒருவர், “பிரதமரின் கண்டனத்தை ஒட்டி ஆகாஷ் விஜய்வர்கியாவுக்கு பாஜக அவர் செய்கைக்கு விளக்கம் கோரி நாளை நோட்டிஸ் அனுப்ப உள்ளது. அவர் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் அவருக்கு ம. பி, மாநில பாஜக மூலம் இந்த நோட்டிஸ் அளிக்கப்படும். அவருடைய விளக்கத்துக்கு பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.