சென்னை

நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டத்தால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ள பல ஓட்டைகள் வெளியில் வந்துள்ளன.

மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.    அத்துடன் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும் என்னும் நிலை உள்ளது.   ஆயினும் தேர்வு மற்றும் நேர்காணலில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ளது தற்போது வெளி வந்துள்ளது.   இந்த வருடம் மூன்று மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்த தகவல்கள் வெளி வந்துள்ளது.

முதன் முதலில் தேனி மருத்துவக் கல்லூரியில் இவ்வாறு ஆள் மாறாட்டம் நடந்துள்ளது தெரிய வந்தது.   அதன் பிறகு நடந்த விசாரணையில் மேலும் இரு ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.   அத்துடன் மருத்துவக் கல்லூரி இயக்குநரகம்  இந்த வருடம் சேர்ந்துள்ள அனைத்து மாணவர்கள் விவரங்களையும் சோதனை இட உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு சோதனை இடுவதில் பல சிரமங்களுள்ளதாக மருத்துவக் கல்லூரிகள் நிர்வாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  ஒரு மூத்த பேராசிரியர், “பல மாணவர்கள் பள்ளி இறுதிப் படிப்பை நான்கு வருடங்களுக்கு முன்பு முடித்துள்ளனர்.  எனவே பள்ளியில் உள்ள புகைப்படத்துக்கும் தற்போதைய நிலைக்கும் மிகவும் வேறுபாடுகள் இருக்கும்.  எனவே அந்த புகைப்படங்களைக் கொண்டு ஒப்பிடுவதால் மிகவும் தவறுகள் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி நீட் தேர்வுகளில் பயோ மெட்ரிக் எனப்படும் கைரேகை அடையாள முறை பின்பற்றப்படுவது இல்லை.   அடுத்த வருடத்திலிருந்து தேர்வு எழுதுபவர்களின் ரேகை  பதியப்பட்டு அவை கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் போது ஒப்பிடப்படும் எனவும்   இதுவரை அப்படி ஒரு சோதனை இல்லாததால் பல முறைகேடுகள் ஏற்கனவே நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் பல பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.