சீரியல்களுக்கே சீரியலாய் சீரியஸ் பிரச்சினைகள்..

சில வாரங்கள் என்ன பல ஆண்டுகளுக்கே இழுத்து பெண்களை தொடர்ச்சியாக அழவைக்கும் ஆற்றல் தமிழ் டிவி சீரியல்களுக்கு உண்டு.

விளம்பர இடைவேளைகளில் மட்டுமே குடும்பத்தினருக்கு உணவு பரிமாறும் அளவுக்கு சீரியல் பைத்தியங்களாக பெண்கள் மாறிவிட்டுள்ளனர். இப்படி லட்சக்கணக்கான பெண்களை ஆட்டிப்படைக்கும் டீவி சீரியல்களே, இப்போது கடுமையான கொரோனா விவகாரத்தில் கதறிக்கொண்டிருக்கின்றன.

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் படப்பிடிப்புகளை நடத்த முடியாமல் தயாரிப்பு பணிகள் நின்றுபோய், முதன் முறையாக டிவிகள் அனைத்திலும் சீரியல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

புதிய சீரியல்களுக்கு பதிலாக, அரைத்த மாவையே அரைப்பது போல் பழைய சீரியல்களைப் போட்டு சேனல்கள் ஒவ்வொன்றும் ஒப்பேற்றி வருகின்றன.

இருப்பினும் புதிய சீரியல்கள் ஷுட்டிங் நின்றுபோயுள்ளதால் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள் பல்லாயிரம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு  பல்வேறு கட்டங்களில் தளர்த்தப்பட்டுவரும நிலையில், அண்மையில் சின்னத்திரை தரப்பினர் தமிழக அரசிடம் படப்பிடிப்புக்கு அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதன் பலனாக 20 பேர் மட்டும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்க அனுமதி கொடுக்கப்பட்டது. உடனே சின்னத்திரை சீரியல்கள் பணி மீண்டும் களைக் கட்டும் எனப் பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் நிகழ்ந்ததோ வேறு யாருமே படப்பிடிப்புகளை தொடங்க முன் வரவில்லை.

20 பேரை வைத்துப் படப்பிடிப்பு என்பது நடக்கவே நடக்காத காரியம் என்று புலம்பும் அவர்கள் மேலும் பல காரணங்களைப் பட்டியலிடுகின்றனர்.

‘’டிவி சீரியல் நடத்த அரசு அனுமதித்து இருப்பது வெறும் 20 பேர் மட்டுமே ஆனால் ஆனால் குடும்ப சீரியலில் பொதுவாக ஒரு காட்சியில் தோன்றவே ஆறேழு பேர் வேண்டும்.

இதற்கப்புறம் இயக்குநர், உதவி இயக்குநர்கள் டிராலி மேன்கள் கேமராமேன்கள் மேக்கப் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களை ஏற்றிவரும் வாடகை வாகன ஓட்டுநர்கள் எனக் குறைந்த பட்சம் 50 முதல் 75 பேர் வரை தேவைப்படுவார்கள்..

அடுத்து சமூக இடைவெளி விவகாரம். படப்பிடிப்பு தளங்களில் சமூக இடைவெளி எல்லாம் பார்த்தால் பல சீன்களை எடுக்கவே முடியாது.

சீரியல்களைப் பொறுத்தவரை, கதை நடக்கும் வீடுகள்தான் மிக முக்கியமான பின்னணி. ஏற்கனவே பல சீரியல்களில் சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து ஷூட்டிங் நடத்தி முடித்துள்ளனர் மீண்டும் கண்டினிவிட்டிக்காக அதே வீடுகளில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டும் ஆனால் இப்போது கொரோனா காலத்தில் பல வீடுகள் நோய்த்தொற்று அதிகமான பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளன. அங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது. அப்படியே அனுமதி பெற்றாலும் அந்த வீடுகளின் உரிமையாளர்கள் சூட்டிங் நடத்த இடத்தை தருவதற்கு தயாராக இல்லை. மிகவும் பயப்படுகின்றனர்

படப்பிடிப்பு நடக்கும் இடங்களை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும், படப்பிடிப்புத் தளத்தில் உள்ளவர்களுக்கு சானிடைசர், கையுறை, மாஸ்க் போன்றவற்றையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றெல்லாம் அரசு விதிகளை விதிக்கிறது. இதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளங்களுக்கு ஆட்களை அழைத்து வரும் வாகனங்களைத்  தினமும் 5 முறையாவது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சொல்கிறது. இது போதாதென்று படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு யாராவது நோய்த்தொற்று வந்தால் இன்சூரன்ஸ் நஷ்டயீடு என தமிழக அரசு கடுமையான நிபந்தனைகளை அடுக்கிக் கொண்டே போகிறது.

இதன்படி எல்லாம் ஒரு நாள் சூட்டிங் எடுத்தால் ஒன்றுக்கு பத்து மடங்கு செலவு செய்ய வேண்டும் அப்படி செலவு செய்வதைவிட சூட்டிங் நடத்தாமல் இருப்பதே நல்லது’’

பிரச்சினை இவ்வளவு தூரம் போன பிறகு தற்போது தமிழக அரசு தன்நிலையில் இருந்து இறங்கிவந்துள்ளது

சின்னத்திரை ஷுட்டிங்கில் 60 பேர்வரை அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் மாநகராட்சியிடமும், மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும் படக்குழுவினர் முன்அனுமதி வாங்கியாகவேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், சீரியல்கள் ஷுட்டிங்தொடங்கி விரைவில், வீடுகளில் விட்ட இடங்களில் பெண்களை மீண்டும் டிவிக்கள் அழவைக்கப்போகின்றன என்பதுதான்..

‘’கொரோனாவைவிட கொடூரமானவ இந்த திலகம்ன்றதை அவளுக்கு நான் காட்றேன்’’ என்ற டைமிங் டயலாக்குகளை அதிகம் டிவிக்களில் கேட்கலாம்.

வி.பி.லதா